Tuesday, October 08, 2013

மஹாபாரதம்--தமிழ் மொழிபெயர்ப்பு--மறு வெளியீடு குறித்த ஒரு வேண்டுகோள்

கும்பகோணம் பதிப்பு என்றறியப்படும் பதிப்பை வெளியிட்டுள்ள திரு
வெங்கடரமணன் என்ற தனிநபர், எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில்,
தன்னுடைய பாட்டனார் காலத்தில் எடுத்த முயற்சியைப் பதிப்பு காணச் செய்து,
இதிகாச தாகம் கொண்ட அனைவருடைய தாகத்தையும் தணிவித்தார். இப்போது, அந்தப்
பதிப்பில் உள்ள ஒன்பது தொகுதிகளும் சேர்த்து வாங்க வேண்டும் என்ற
தவிப்புள்ளவர்களுக்கு, கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத்
திட்டத்தில் ஏற்படக்கூடிய பொருட்செலவும், முதலீடும், மிகமிக நடுத்தரக்
குடும்பத்தைச் சேர்ந்த பதிப்பாளரால் இயலாத ஒன்றாகப் போயிருக்கிறது.

குறைந்தபட்சம் இவ்வளவு பிரதிகளாவது விற்குமென்றால், மறுபதிப்பில்
இறங்கும் தைரியம் வரும் என்கிறார் வெங்கடரமணன். கடந்த முறை சென்னையில்
அவரைச் சந்தித்த போதும், மூன்று நான்கு நாட்களுக்கு முன்னால் தொலைபேசி
உரையாடலின் போதும் இதைத்தான் குறிப்பிட்டார். நான் இந்த வாழ்வில்
சந்தித்தவர்களில், இவ்வளவு பெரிய காரியத்தைத் தனியொரு ஆளாய்ச்
சாதித்தும், தலைகீழாக நிற்கத் தெரியாத நபர். எளிமையும் உண்மையும்
கொண்டவர். இவருக்குத் துணிவூட்டுவதற்காக நண்பர் மாரியப்பன் பால்ராஜ், பல
குழுக்களிலும் வலைத்தளங்கலிலும் விடாப்பிடியாக எழுதி வருகிறார். பத்து
நிமிடங்களுக்கு முன்னால் அவரிடமிருந்து வந்திருக்கும் வேண்டுகோளை இங்கே
உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். இது என் வேண்டுகோளும் கூட.
நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒருவேளை பார்ட்டிக்கு செலவழிக்கும் பணத்தை விட
மிகக் குறைவான தொகைதான் இது. குடும்பத்தோடு இரண்டு சினிமா பார்க்க ஆகும்
செலவு என்றும் சொல்லலாம். அவையெல்லாம் ஒரே ஒருவேளைக்கு இன்பம் பயப்பன.
இது நீடித்து, தலைமுறைக்கும் நன்மை பயக்கக் கூடியது. இதில் பங்கேற்று
வடம்பிடிக்க நண்பர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி
மாரியப்பன் பால்ராஜின் வேண்டுகோள், கீழே:

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப்
பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர்
பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள்
கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன.
மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள்
வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச்
செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள்
நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு
சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும்
அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்
திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க
விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை
வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும்
சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும்
குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விலை ரூ.5000
இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை
மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீசக்ரா
பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற
மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு
மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.
குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன்
அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம்
செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும்
அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத்
தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

பங்கேற்கும் அனைவரையும் வாணி ஆசிர்வதிப்பாளக.
--
அன்புடன்,
ஹரிகி.

No comments: