Thursday, December 22, 2016

கைபேசி கூட இல்லாத ஒரு நிறுவனத் தலைவர் – ஸ்டீவ் ஹில்டன்

ஆங்கில மூலம் – https://www.theguardian.com/technology/2016/jan/11/steve-hilton-silicon-valley-no-cellphone-technology-apps-uber

நான் ஸ்டீவ் ஹில்டன். மேலே படிக்கும் முன் ஒன்றை நம்புங்கள். நான் உங்களை மாற்ற முயலவில்லை. உங்களுக்கு போதனை தரவோ, குறைகூறவோ போவதில்லை. சில நேரங்களில் அப்படித் தோன்றினால் மன்னிக்கவும். எனது நோக்கம் அதுவல்ல. எனது செயல்கள் பற்றியே பேசப் போகிறேன்.

சில காலம் முன் நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். இப்போது ஒரு கணினி துளிர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதுவே பலருக்கு வியப்பு. பள்ளி, கல்லூரி நாட்களில் புத்தகம் படிப்பதையே வெறுத்த நான், இப்போது ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன் என்பது கூடுதல் வியப்புதானே.

இவற்றை விட பலரும், ஏன், எல்லோருமே நம்ப முடியாமல் வியக்கும் செய்தி ஒன்று உண்டு. ஆம். என்னிடம் கைபேசி இல்லை. ஸ்மார்ட் போனைச் சொல்லவில்லை. சாதாரண எண்களைக் கொண்ட பழங்காலக் கைபேசி கூட இல்லை. எந்த விதமான கைபேசியையும் நான் பயன்படுத்துவதில்லை. என்ன? பிறகு எப்படி என்னிடம் பேசுவதா? என்னிடம்தான் தொலைபேசி (landline) இருக்கிறதே. எந்தக் கைபேசியில் இருந்தும் அதற்கு அழைக்கலாமே. வீட்டிலும் அலுவலகத்திலும் தொலைபேசி உள்ளது. இது போதுமே.
இதைப்பற்றிக் கேள்விப்படும் பலரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது எனக்குப் பழகி விட்டது. ‘நீர் எப்படி ஐயா வாழ்கிறீர்?’ என்பதே பலரது கேள்வி. ‘அது சரி. உங்கள் மனைவி எப்படி உங்களோடு வாழ்கிறார்?’ இது பலரது வியப்பு. அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இந்த நவீன உலகில், தொழில் நுட்பங்களின் கோட்டையான சிலிக்கான் வேலியில் எப்படி ஒரு மனிதன் கைபேசி இல்லாமல் வாழ முடியும்?

நான் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கைபேசி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். எனது அனுபவங்களைப் பற்றி பலரும் கேட்கின்றனர்.

இதோ எனது கதை.

2012. இங்கிலாந்து. என் மனைவி ரேச்சல் கூகுள் நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருந்தார். கடும் வேலை அவரைக் கசக்கிப் பிழிந்தது. நான் இங்கிலாந்துப் பிரதமருக்கு அரசின் கொள்கை ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். அரசு எந்திரத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. வேலை கசந்துபோன நானும் மனைவியும் இரு மகன்களுடன் வேறு நாடு போக முடிவு செய்தோம். கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதிக்கு நாடு மாறிப் போனோம்.

அப்போது இங்கிலாந்து அரசு தந்த கைபேசி வைத்திருந்தேன். அது ஒரு சாதாரண நோக்கியா கைபேசி. நான் எப்போதும் எந்த ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தியதில்லை. எல்லா நேரமும் அலுவலக மின்னஞ்சல்கள் என்னைப் பின் தொடர்வது எனக்குப் பிடிக்காது.
அந்த போனும் கலிபோர்னியா வந்தபின் வேலை செய்யவில்லை. எனவே அதே போன்ற பழங்காலக் கைபேசியைத் தேடி அலைந்தேன். எந்தக் கடையிலும் சாதாரணக் கைபேசி விற்கப் படுவதே இல்லை என்பதை அறிந்து வியந்தேன். ஒரு வழியாக eBay வழியே கிடைத்தது. சிறிது காலம் பயன்படுத்தினாலும் அடிக்கடி சிக்கல் வந்தது. சரி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. ஒரு நாள் மாலை, கடற்கரையில் அதன் சார்ஜ் போடும் துளையில் மணல் அடைத்துக் கொண்டது. ‘அவ்வளவுதான். இனி இது வேலை செய்யாது. போதும் கைபேசியின் தேடல். கைபேசி இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? வாழ்க்கை முடிந்து விடுமா என்ன? ‘ என்று யோசித்தபடியே அந்தக் கடைசி கைபேசியையும் குப்பைத்தொட்டியில் அடக்கம் செய்தேன்.

அது என் வாழ்க்கையின் மிக முடிவு என்பதை அப்போது அறியவில்லை. ஒரு வார காலம் நன்றாகவே போனது. நடைபயணம், சைக்கிள், பேருந்து என பயணங்கள் எந்த இடையூறும் இன்றி இனிமையாகவே இருந்தன. மிகமிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிக ஓய்வாகவும் செயல்களில் முழு கவனத்தோடும் இருப்பதை உணர்ந்தேன். கலிபோர்னியாவுக்கு மாறியதே பெரிய மாற்றம் என நினைத்திருந்தேன். ஆனால் இதுவே என் வாழ்வை மாற்றிய முக்கிய செயல் ஆனது.

‘ஒருவேளை விரைவில் கைபேசி வாங்க நேரிடலாம். ஆனால் முடிந்தவரை தள்ளிப் போடுவோமே.’ என்று உறுதியோடு இருந்தேன். அப்போது செப்டம்பர் 2012. இன்று வரை அதே உறுதியோடு வாழ முடிகிறது.

என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. ‘மக்கள் எப்படி உங்களைத் தொடர்பு கொள்கிறார்கள்?’

‘மின்னஞ்சல்.’ நான் ஒன்றும் காட்டுக்கு ஓடிப் போய்விடவில்லையே. என்னிடம் மடிக்கணினி உள்ளது. இணைய இணைப்பும் தான். தினமும் அதில்தான் வேலை செய்கிறேன். பயணங்களிலும் கொண்டு செல்கிறேன். விமான நிலையங்களிலும் மின்னஞ்சல் பார்த்து வருகிறேன்.

எந்தச் சிக்கலும் இன்றி வியாபாரச் சந்திப்புகளையும் நடத்தி வருகிறேன். காலையில் நியூயார்க். மாலையில் வாஷிங்டன் டிசி என்று கூட வாடிக்கையாளர் சந்திப்புகள் நடத்துகிறேன். கடைசி நிமிட மாறுதல்கள், காலதாமத அறிவிப்புகள் கூட மின்னஞ்சல் வழியே அனுப்புகிறேன். பெறுகிறேன்.

‘உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆகிறது என்றால் என்ன செய்வீர்கள்?’ இதுவே பலரும் அக்கறையுடன் கேட்கும் கேள்வி. 8, 4 வயது மகன்கள். பொறுப்பான பிள்ளைகள். எனது நேரத்தை அவர்களுடன் முழுமையாகக் கழிக்கிறேன். அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டுமா என்ன? அவர்களுக்கு ஏதாவது ஆகிறது எனில் யாராவது மனிதர்கள் அருகில் இருப்பர். நம் பெற்றோர்கள் எப்படி நம்மை வளர்த்தார்கள்? நாம் கைபேசியுடன் வளரவில்லையே. அட. இருபது ஆண்டுகள் முன்பு வரை மனித வரலாற்றிலேயே கைபேசி இல்லையே.

அடுத்து எனது துளிர் நிறுவனம். ‘எப்படி கைபேசி இல்லாமல் ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்?’ ‘அட. அங்கும் தொலைபேசி உள்ளதே.’ எமது நிறுவன வலைத்தளங்களும் செயலிகளும் கைபேசியில் எப்படி செயல்படுகின்றன என்பதை பிறரது கைபேசியில் காட்டச் சொல்லி அறிகிறேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு சந்திப்புதான் சிக்கல் ஆனது. எனது காலதாமதம் பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்க இயலவில்லை. அது கஷ்டமாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் இதுவரை இல்லை.

என்னால் முடியாத சில விஷயங்களும் உள்ளன. பலருக்கும் தெரியும் பல செய்திகள் எனக்குத் தெரிவதே இல்லை. சமூக ஊடகத் தகவல்கள், கிசுகிசுக்கள், தட்ப வெப்பநிலை, பிரபலங்களின் வாழ்க்கை போன்றவற்றை நான் அறிவதே இல்லை. எப்போதும் கைபேசியைத் தடவிக் கொண்டே இருப்போருக்கு இவை எல்லாமே தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்கள் நாள் முழுதும் கைபேசியுடன் மட்டுமே செலவிடுகின்றனர்.
இன்னொரு சிக்கல். என்னால் உபர் டாக்ஸியைப் பெற முடிவதில்லை. உபர் டாக்ஸி சேவையைப் பெற அவர்கள் செயலி வழியாக மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த ஊரில் பலருக்கும் அது தண்ணீர் போல அவசியமான ஒன்றாக உள்ளது. எனக்கு இல்லை. நான் எனது சைக்கிள், பேருந்து, ரயில் இவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒருமுறை ஒரு இரவு விருந்து முடிந்து வெகு நேரமாகிப் போனதால் நண்பர் மூலமாக டாக்ஸி பதிவு செய்து அவரிடம் பணம் தந்து விட்டேன்.

நீங்கள் என் மனைவியிடம் பேசினால் இவ்வாறு கூறுவார் என நினைக்கிறேன். ‘ஸ்டீவ் ஒரு சுயநலவாதி. அவர் கைபேசி பயன்படுத்துவதில்லை. ஆனால் அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளின் உதவியை எதிர்பார்ப்பார். முழு உலகமே அவரையே சுற்றுகிறது என்று நம்புகிறார். எல்லாமே திட்டமிட்டபடியே நடக்க வேண்டும் அவருக்கு. மாலை 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என முடிவு செய்தால், அவ்வாறே செய்தாக வேண்டும். கடைசி நேர மாறுதல்களைக் கூட அவரிடம் சொல்ல இயலாது. எப்படிச் சொல்வது? அவரிடம்தான் கைபேசி இல்லையே. இதனால் எனக்குப் பலநேரம் கோபம் வரும்.’

உண்மைதான். இது போன்ற சண்டைகள் அடிக்கடி எங்களுக்குள் நடக்கும். அவசரத் தேவைகளுக்கு பிறர் கைபேசிகளைப் பயன்படுத்துவது, அதுவும் ஓசியிலேயே, நல்லதில்லைதான். ஆனால் இது எப்போதுமே அல்ல. மாதத்தில் 4-5 முறைதான். எனது முடிவுகள் இது போன்ற சூழ்நிலைகளைத் தரும் என்பது நான் யூகித்ததுதான்.
மிக முக்கியமான கேள்வி இதோ. ‘உங்கள் சொந்த முடிவுகளுக்காக பிறரைக் கஷ்டப் படுத்துவது சரியா?’

‘திட்டமிட்டபடி நடப்பது சரிதானே. நாம் சொன்னபடி நடப்பதில் என்ன தவறு? ஒருவரை 4 மணிக்கு சந்திப்பதாய்ச் சொன்னால், 4 மணிக்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும் தானே? கடைசி நேர மாறுதல்கள் ஏன்? கைபேசியில் அறிவித்து விடலாம் என்பதால் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்காமல், பிறரைக் காக்க வைப்பது மட்டும் சரியா? அது மட்டும் மரியாதையான செயலா? இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே காலதாமதமாகப் போயுள்ளேன். ஹோட்டல் பெயர் மீதான குழப்பத்தால் வேறு ஒரு இடத்திற்குப் போய்விட்டேன். வேறு எப்போதும் காலதாமதம் ஆனதே இல்லை.

இப்போதெல்லாம் பேசுவதற்குப் பதிலாக sms, WhatsApp, email போன்றவற்றையே பலரும் பயன்படுத்துகின்றனர். என்னை தொலைபேசியில் அழையுங்கள் என்று சொன்னால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.

பிறருடன் எப்போதும் தொனர்பிலேயே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. கைதிகளைக் கண்காணிக்க அவர்கள் உடலில் சிப் பொருத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் செய்வது என்ன? எப்போதும் யாரும் நம்மைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாமே நம்மை கைதிகளாக்கிக் கொண்டுள்ளோம். நம்முடன் நாம் பேச, வாசிக்க, யோசிக்க, தனிமையை, இசையை, இயற்கையை, நம் எண்ணங்களை அனுபவிக்க நமக்கு நேரமே இருப்பதில்லையே.

நான் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் நான் விளக்க விரும்புவது என்னவெனில் கைபேசி இல்லாமல் இருப்பது எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது. நான் தாமதமாகச் சென்ற அந்த வியாபாரச் சந்திப்புக்குப் பின், சக நிறுவனர் சொன்னார். ‘ஸ்டீவ். நீ ஒரு கைபேசி வாங்கியே ஆக வேண்டும்.’ அதைக் கேட்டு என் கண்கள் கலங்கி கண்ணீர் விட்டன. எனக்கு மீண்டும் கவலை மிகுந்த, அவசரமான, நிம்மதியற்ற வாழ்க்கை வந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனாலும் அவர் என் முடிவுகளைப் புரிந்து கொண்டார்.

என் கதையைக் கேட்கும் பலரின் பதில் இது. ‘நீங்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்கிறீர்கள். என்னாலும் இப்படி வாழ முடிந்தால், என் வாழ்க்கையும் மிக இனிதாக இருக்கும்.’
உங்களாலும் இப்படி வாழ முடியும். எல்லோராலும் முடியும். பல நூற்றாண்டுகளாக மனித இனம் கைபேசி இல்லாமல் வாழ முடிந்த போது, நம்மால் வாழ முடியாதா என்ன? சரியான திட்டமிடலும் ஒழுங்கும் மட்டுமே தேவை. தெளிவான பிற தொடர்பு வழிகளை அறிவித்து விட்டு, ஒரு வாரம் கைபேசி இல்லாமல் வாழ்ந்து பாருங்கள். விளைவுகளைப் பொறுத்து அதை நீட்டியுங்கள். உங்களையே நீங்கள் புதிதாகக் கண்டுபிடிப்பீர்கள்.

வாழ்த்துகள்.

உங்கள் அனுபவங்களை என்னிடம் பகிர நினைத்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள். அட. நான் டுவிட்டரில் கூட இருக்கிறேன். @stevehiltonx
Steve Hilton, crowd PAC நிறுவனத்தின் CEO. அவரது நூல் More human ஆகும்.

No comments: