Tuesday, August 15, 2017

நம்ம சந்தை / சிறார் களம்-2 - நிகழ்வுக் குறிப்புகள்


கடந்த ஆகத்து 13 ஞாயிறு 2017 அன்று கிழக்கு தாம்பரத்தில் 'நம்ம சந்தை / சிறார் களம்-2' என்ற நிகழ்வை தாம்பரம் மக்கள் குழு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4 வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.





இடம் : அகத்தி தோட்டம், MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் ). இவ்விடம் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால், நான், நித்யா, வியன் மூவருமே சென்றோம். இடத்தில் பெரிய தோட்டம், மரம், செடிகளோடு உள்ளது.  13 கடைகள் இருந்தன. இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், எலுமிச்சை, செக்கு எண்ணை, சோப்பு, பலகாரங்கள், இனிப்புகள், நாட்டு மாட்டு மோர், கீரை, புத்தகங்கள், மண்பாண்டங்கள் என பல்வேறு கடைகள் இருந்தன. ஒரு இளைஞர் தமிழர் தற்காப்புக் கலைகள் பற்றிப் பேசினார். சிலம்பத்தின் சில முறைகளை செய்து காட்டினார். ஒரு சிறுமி தன் சிறு கைகளால் அனைவருக்கும் டாட்டூ வரைந்து விட்டது பேரழகு.



பின், 'விவசாயமும் சந்தையும்' என்ற தலைப்பில் புதுகோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தோழர் அகிலா பாரதி உரையாற்றினார்.


சிறுவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பல்லுயிர் ஓங்குக என்று சொல்லி ஒரு பப்பாளியை பகுத்துண்டோம். பின் அவர்களுக்கான விளையாட்டுகள், கதை சொல்லல் என பல நிகழ்வுகள் தனியே நடந்தன.



பாரதி கண்ணன் ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் தந்தார். நைஜீரியா நாட்டில் ஷெல் நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, இனக்குழுக்களிடையே உருவாக்கிய கலகங்கள், போராட்டங்கள், மரணங்கள் பற்றிப் பேசும் நூல் அது. இதே நிலைமை கதிராமங்கலத்தில் தொடர்வது பற்றியும் உரையாடினார்.



வழக்கறிஞர் சிவக்குமார், உள்ளாட்சி, ஊராட்சி பற்றி பேசினார். எல்லாப் பஞ்சாயத்துகளிலும் நடக்கும் கிராம சபைகள் பற்றி பேசினார். அதன் தீர்மானங்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தீர்மானங்கள் போலவே வலுவானவை என்றார். அனைவரையும் தமது அல்லது அருகில் நடக்கும் கிராம சபைகளில் கலந்து கொள்ள வேண்டினார்.


மதிய உணவு சிறு தானியங்களால் செய்யப் பட்டிருந்தது. முறையாகச் செய்தால், சிறு தானிய உணவு, அரிசிச் சோறை விட நன்றாகவே இருப்பதை உணர்ந்தோம்.

பிறகு, கருத்துக்கேட்பு நிகழ்வில் பலரும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குறைகளையும் தெரிவித்தனர். சுமார் 4 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


பெரும்பாலும் விவசாயிகளே நேரடியாக விற்கின்றனர். அவர்களுக்கோ, பொது மக்களுக்கோ கட்டணம் ஏதுமில்லை. சுமார் 150 குடும்பங்கள் வந்திருந்தனர். ஆர்வமுடன் பல்வேறு பொருட்களை வாங்கினர். விவசாயிகளே நேரடி விற்பனை செய்ததால், விலையும் ஆர்கானிக் கடைகளை விட குறைவாகவே இருந்தது.

'தாம்பரம் மக்கள் குழு' வின் தன்னார்வலர்களே அனைத்து செலவுகளையும் ஏற்கின்றனர். பல்வேறு தினசரி வேலைகளினூடே, இப்பணிகளுக்கு நேரம் ஒதுக்கி, உழைப்பை நல்கும் அனைத்து நல்லோர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். வருகைப்பதிவு செய்தல், சமையல், சுத்தம் செய்தல், சிறார்களுக்கு நிகழ்வுகள் நடத்துதல், அவர்களுக்கான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், பேனர் தயாரித்தல், பரப்புரை செய்தல் எனப் பல்வேறு வேலைகள் உள்ளன. அடுத்த நிகழ்வுக்கு என்னாலான உதவிகள் செய்யப் போகிறேன். நீங்களும் ஏதேனும் ஒரு வகையில் உதவ இயலுமெனில் இவர்களை அழையுங்கள்.
மணி -  9840890168 , இளவரசு - 9940258184, தீபா - 9042023090

இந்நிகழ்வை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

தாம்பரம் அருகில் உள்ளோர் தவற விடக்கூடாத நிகழ்வு இது.

அகத்தியின் முகநூல் பக்கம் இது - https://www.facebook.com/Agaththi/

நிகழ்வின் சில படங்கள் இங்கே - https://goo.gl/photos/F2AmKwiNzyEcEF2g6